onsdag 6. februar 2008

காதல் கடிதம் -விமர்சனம் 3




-துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

யுத்தம் - காதல் இவை இரண்டையும் எவராலும் தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்பதைக் காதல் கடிதம் உணர்த்தி நிற்கின்றது. வோட்டர்ஃபோல்ஸ் மூவி மேக்கர்ஸ் (Waterfalls Movie Makers) இன் இரண்டு வருட கடின உழைப்பினால் காதல் கடிதம் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

ஜமுனாவாக அனிஷாவும், கார்த்திக்காக ஸ்ரீபாலாஜியும் இரண்டு இந்தியப் புதுமுகங்கள் காதல் கடிதம் மூலம் அறிமுகம். போர்ச் சூழ்நிலையில் வவுனியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஜமுனா இசை பயில்வதற்காகச் சென்னை செல்கின்றாள். கார்த்திக் எஃப் எம் (FM) வானொலி நிலையமொன்றில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் ஒலிப்பதிவாளராகப் (DJ) பணியாற்றுகின்றான்.

ஜமுனா எஸ்.எம்.எஸ் மூலம் பாடல்களை விரும்பிக் கேட்க, கார்த்திக் அவளின் விருப்பத் தெரிவுகளைத் தொகுத்து வானொலி மூலமாக வழங்குகின்றான். கார்த்திக் மனதில் படிப்படியாகக் காதல் மலர்கின்றது.
ஒரு நாள் கார்த்திக் 'I Love You Yamuna' எனத் தனது காதலை ஜமுனாவிடம் வெளிப்படுத்துகின்றான். எல்லோரும் போல 'I Love You Yamuna' என்று கார்த்திக்கும் சொல்கின்றான் என நினைத்து, அவனின் காதலை மறுக்கின்றாள். மறுதலிக்கின்றாள் ஜமுனா.
தனது அப்பாவே தனக்கு எல்லாம் என்றும், ஊருக்குத் திரும்பிய பின்னர் கடிதம் எழுதுவதாகவும் கூறிப் படிப்பு முடிந்த பின்னர் வவுனியாவிற்கு ஜமுனா திரும்புகின்றாள்.

இலங்கையில் நிகழும் யுத்தம் ஒரு நாள் ஓயும், நான் தனியே வயலின் இசைக் கச்சேரி நடத்துவேன் என்று ஜமுனா தனது கல்லூரி நாட்களில் கனவு கண்டாள். ஜமுனாவின் கடிதத்தைத் தினமும் எதிர்பார்த்து, ஏமாந்து போகும் கார்த்திக் அவளின் பிரிவால் ஒவ்வொரு கணமும் வாடுகின்றான். கடிதத்தைக் காணாமல் ஏங்கித் தவிக்கும் கார்த்திக் சென்னையிலிருந்து ஜமுனாவைத் தேடி வவுனியா செல்கின்றான். இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை இயக்குனர் இலங்கையின் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண பொது மக்கள் எதிர்கொள்ளும் நிலக்கண்ணி வெடியுடன் தொடர்புபடுத்தியிருக்கின்றார்.

யுத்தத்தைப் பார்த்துப் பார்த்து எங்களுக்குப் பழகிப் போச்சு என்ற ஜமுனாவின் தந்தையாக நடிக்கும் நடராஜசிவத்தின் வசனம் காதுகளில் தொடர்ந்தும் எதிரொலிக்கின்றது.

வசீகரனின் வசீகரமான வரிகள் தூய்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. யாழ் தேவி பிரயாணத்தின் சந்தோஷமான நிமிடங்களை யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்…என்ற பாடலின் மூலமாக மீண்டும் இரைமீட்டிப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நீண்ட யாழ்தேவி பிரயாணத்தின் இன்பகரமான நிமிடங்களை இழந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இப் பாடல் ஓர் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் யாழ்தேவி 2.30 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது.
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட வசீகரன் சிவலிங்கம் தனது இளமைக் கால நினைவுகளையும் உணர்வுகளையும் வரிகளில் வடித்தெடுக்க, உதயா அவ் வரிகளுக்கு இசையமைத்து மேலும் மெருகூட்டியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வவுனியா உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீரூற்றுக்கள், மலைகள், பூங்கா என இயற்கைக் காட்சிகள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இயக்குனர் முகேஷின் முதல் முயற்சி இது. வினோலியாவின் மூலக்கதை காதல் கடிதமாக வரையப்பட்டுள்ளது.

காதல் கடிதம் ஒலி இறுவெட்டு ஆல்பம் 2005ஆம் ஆண்டு எனது கைகளுக்குக் கிட்டியது. அதை முதன் முதலாகச் செவிமடுத்த எனக்கு யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாத பல மகிழ்ச்சிகரமான நினைவுகள் என் மனதைத் தொட்டுச் சென்றன. அவற்றுள் நீண்ட யாழ்தேவிப் பிரயாணம், பனங்காய்ப் பணியாரம், கிழுவை மரம், கூழ், பனையோலை பாய், காங்கேசன்துறை சீமெந்து, கீரிமலைப் பனங்கள்ளு, சுன்னாகத்து மாங்காய், கொடிகாமத்துத் தேங்காய், கீச்சு மாச்சு தம்பளம்கீயா மாயா தம்பளம் மாயா மாயா தம்பளம் போன்ற என்றுமே மறக்க முடியாத நினைவுகளில் நிரந்தரமாகப் பதிந்துள்ள வார்த்தைகளும், வசனங்களும் திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டுவதைக் காணலாம்.

'ஈழப் பெண்ணே' பாடலை மதுபாலகிருஷ்ணனும், 'யாரும் எழுதாத பாடல் கேட்கத் தானே ஆசை' பாடலை உன்னிமேனனும், ஜீவா ரேகாவும், 'எழுது எழுது' பாடலை ஸ்ரீநிவாசும், அம்பிலியும், 'ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே' பாடலை விது பிரதாபனும், 'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே தண்டவாளம்' என்ற பாடலை சாம் பி.கீர்த்தனும் பாடியுள்ளனர். ஆயினும் கிருஸ்ணராஜ் குழவினர் பாடிய 'பனங்காய் பணியாரம்' பாடலைத் திரைப்படத்தில் உள்ளடக்காதது கவலைக்குரியது. You Tube: பனங்காய் பணியாரம் காணொளி

mailto:dushi.pillai@gmail.com