tirsdag 5. februar 2008

காதல் கடிதம்- விமர்சனம் 2

யுத்த பூமியில் நீண்டு வரும் இரத்தவெளியின் வேர்கள் எதிலெல்லாம் ஊடுருவி உயிர்குடிக்கிறது என்பதை உருக உருக எழுதியிருக்கும் கதையே இந்த கடிதம்.

வானொலியில் பணிபுரியும் ஸ்ரீபாலாஜி. இசை கற்பதற்காக சென்னை வந்திருக்கும் இலங்கை பெண் அனிஷா. ஆரம்பத்தில் தவறான புரிதல்களில் இருக்கும் இருவரையும் நேர்க்கோட்டில் இணைக்கிறது நட்பு. ஒரு கட்டத்தில் அனிஷா மேல் காதலாகிறது பாலாஜிக்கு. காதலை சொன்னால் நட்பு சிதறிவிடுமோ என்ற அச்சத்தில் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்குகிறார்.

ஆஹா... பல படங்களில் கடைசிவரை காதலை சொல்லாத நாயகன் மாதிரியா இவரும்? என்று நமக்குள் எழும் சந்தேகத்தை 'நங்' கென்று குட்டி வேறுமாதிரி நகர்த்தப்படுகிறது திரைக்கதை.

படிப்புமுடிந்து அனிஷா ஊருக்கு திரும்பும் வேளையில் காதலை சொல்கிறார் நாயகன். என்ன பதில் சொல்வார் நாயகி? ஸ்ரீபாலாஜியின் படபடப்பு படம் பார்ப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.

தனது பதிலை ஊரிலிருந்து கடிதம் மூலம் தெரிவிப்பதாக விடைபெறுகிறார் அனிஷா. ம்...ஹூம். தபால்காரனின் முகம்பார்த்து வெறுத்தப்போன நாயகன், இலங்கைக்கே செல்கிறார். போன இடத்தில் ஸ்ரீபாலாஜியின் கையில் கிடைக்கும் அந்த காஸ்ட்லியான கடிதம் சொல்லும் விடை என்ன? படம் பாருங்களேன்!

குழந்தையின் பிஞ்சுவிரல் ஸ்பரிசம் போன்ற கதை. மனசை நைந்த துணியாய் மாற்றும் க்ளைமாக்ஸ். இயக்குனர் முகேஷ் எழுதியிருக்கும் இந்த கடிதம் மரணத்தின், இழப்பின் வலி அறியாதவர்களின் முகவரிகளுக்கும் அஞ்சல் செய்யப்படும் ஆழமான வரிகளாக மனசில் வேறூன்றுகிறது.

நாயகன் ஸ்ரீபாலாஜி அடிப்படையில் கிரிக்கெட் வீரராம். புதுமுகம் போலன்றி நடிப்பிலும் நல்ல ஸ்கோர் எடுத்துள்ளார். நடிப்பின் சாயல் தெரியாத அளவுக்கு இயல்பை வெளிப்படுத்தியுள்ளது சிறப்பம்சம். காதலியின் கடிதம் பார்த்து கதறும் இடத்தில் நம்மையும் கலங்கடிக்கிறார். பரத், சிம்பு போன்ற நடனத்திறமையிலும் அட போடவைக்கிறார்.

நாயகி அனிஷாவுக்கு அளவான வசனங்களே. எனினும் பேசாத இடங்களில்கூட இவரது விழிகளில் கொட்டுகிறது உரை அருவி.
இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருக்கும் நடராஜசிவம் நாயகியின் தந்தையாக வரும் காட்சிகளில் நம்மூர் கல்யாண்குமார்,ராஜேஷ் போல கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி மனசுக்குள் நங்கூரமிடுகிறார்.

கொழும்பு, வவுனியா, கிராமப்புற பகுதிகள் என பாஸ்போர்ட், விசா எதுவுமின்றி, தியேட்டர் டிக்கெட் கட்டணத்திலேயே இலங்கையை சுற்றி பார்த்த திருப்தி. ஒளிப்பதிவாளருக்கும் தரலாம் ஒரு பூங்கொத்து.

கதை, கதாநாயகன் தவிர படத்தில் இருக்கும் இன்னொரு ஹீரோ இசை. 'எழுது எழுது அன்பே ஒரு கடிதம்...' 'நதியின் பெயரில் பிறந்தவளே....' 'யாழ்தேவியில்....' போன்ற பாடல்கள் சுக ராகங்களாய் செவியினிக்க செய்கிறது.

சில இடங்களில் நிசப்தங்களை கடைபிடித்து பின்னணி இசையிலும் நேர்த்தியை நிறைத்துள்ள இசையமைப்பாளர் உதயாவுக்கு நல்ல எதிர்காலம் உதயமாக வாழ்த்துக்கள். இரயில் பயண காட்சிகளில் பின்னணிக்கு எடுத்துள்ள சிரமங்களும் புரிகிறது.

பாடலாசிரியர் வசிகரனின் வரிகளிலும் கலப்படமற்ற தூய்மை பாராட்டுக்குரியது.

'தமிழ்நாட்டுக்கு தங்கள் உடமைகளை விட்டுட்டு அகதியா வந்தவங்கபோலதான் என்னோட காதலியை இழந்து நானும் ஒரு அகதியா திரும்பிப் போறேன்' பேனாவில் கண்ணீர் ஊற்றி எழுதியதைபோல மசை கனக்கச் செய்யும் அந்த வசனம், தியேட்டரை வி்ட்டு வெளியே வந்தும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது. எதிரொலி பாதிக்கவேண்டிய இடங்களில் பரவட்டும்.

படிக்கவேண்டிய கடிதம் இந்த 'காதல் கடிதம்'.

+ கதை நாயகன் க்ளைமாக்ஸ்இசைஒளிப்பதிவு
- முதல்பாதியில் வரும் சில காமெடி காட்சிகள்

Ingen kommentarer: