torsdag 21. juni 2007

காதல் கடிதம் விசேட விழா


மிக விரைவில் வெண்திரையில்!
காதல் கடிதம் விசேட விழா

இலங்கையிலும் இந்தியாவிலும், உலகமெங்கும் ஒரே தினத்தில் வெளிவரவுள்ள காதல் கடிதம் என்ற திரைப்படம் தொடர்பான விசேட விழா சென்னையில் இடம்பெறவுள்ளது.

மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர், இந்தியாவின் சினிமா துறை அமைச்சர், தென்னிந்திய முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், சினிமாத் துறை சார்ந்த பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

காதல் கடிதம் திரைப்படத்தின் அறுபது வீதமான படப்பிடிப்பு காட்சிகள் குறிப்பாக பாடல் காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டன.அவை இலங்கையின் அழகையும் இரம்மியத்தையும் புலப்படுத்தும் விதமாக மலையகத்திலும் ஏனைய எழில் மிகு இடங்களிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் படமாக்கப்பட்டன.

அவற்றைப் பிரபல்யப்படுத்துவதற்காகவும் இந்திய தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் போன்றோருக்கு இலங்கையில் படப்பிடிப்புகளை மேற்கொள்வதற்கான ஆர்வத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்துவதற்காகவும் இலங்கைத் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவுக்கான இலங்கைத் தூதரகம் வோட்டர் போல்ஸ் மூவி மேக்கர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இவ்விழாவுக்கான ஏற்பாட்டை மேற்கொண்டு வருகின்றன.

இவ்விழாவின் போது இலங்கை சினிமாத் துறை தொடர்பில் சினி டிரக்றி-2007 வெளியிடப்படவுள்ளமையும் சிறப்பம்சமாகும்.இவ்விழாவுக்கான ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினரும் சலன சித்திரம் அமைப்பின் ஸ்தாபகருமான க. தேவதாசன் அடுத்த வாரம் சென்னைக்கு பயணமாகிறார்.

அவர் இத்திரைப்பட விழா தொடர்பாக கூறியதாவது, இலங்கையில் சினிமா துறைக்கென தனியமைச்சு வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாகவும் சினிமாத் துறை சார்ந்த அத்தியாவசியமான பல அதிரடி மாற்றங்களுக்கு களமாகவும் இவ்விழா அமையப் போகிறது.

இவ் விழாவையடுத்து இந்திய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இலங்கையை நோக்கி தமது பார்வையை உடனடியாக திருப்புவார்கள். படப்பிடிப்புக்காக அவர்கள் பெருவாரியாக இங்கு வருவதால் இலங்கைக்கு ஏராளமான அந்நியச் செலாவணி கிடைக்கும் அதேவேளை இலங்கைக் கலைஞர்கள் பலருக்கும் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் தொடர் வருமானம் பெறவும் வழி பிறக்கும்.

அவ்வாறே இலங்கையில் தயாரிக்கப்படும் இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு இருந்து வந்த தடை நீங்கி தமிழகத்திலும் வர்த்தக ரீதியில் திரையிடும் விதமாக இந்தியக் கதவுகள் நிரந்தரமாக திறக்கும்.

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் காதல் கடிதம் திரைப்பட விழாவின் வெற்றிக்கு பின் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் சினிமா தயாரிப்பில் ஈடுபடப்போவது நிச்சயமாகும்.

Ingen kommentarer: